×

சின்ன வெங்காயத்துக்கு தனி ஏற்றுமதி குறியீடு எண்: ஒன்றிய அரசுக்கு விவசாய சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், தென்காசி, திண்டுக்கல், திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய சில மாவட்டங்களில் தான் பெரும்பகுதி விளைவிக்கப்படுகிறது. பிற மானாவாரி மாவட்டங்களில் சில வட்டாரங்களில் இது பயிரிடப்படுகிறது. உணவு தேவையில் பெரும் பகுதி வட மாநிலங்களில் விளையும் பெரிய வெங்காயமே ஆதிக்கம் செலுத்துகிறது.

விளைச்சல் குறைகிறபோது நுகர்வோர் நலன் கருதி ஒன்றிய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கிறது. தற்போதுகூட ஏற்றுமதி வரியை 16 சதம் உயர்த்தி வெங்காய ஏற்றுமதியை மட்டுப்படுத்தி உள்ளது. இதனால் பெரிய வெங்காயம் மட்டுமல்ல, சின்ன வெங்காய ஏற்றுமதியும் தடைபடுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டவர்கள் இன்றும் சின்ன வெங்காயத்தை விரும்புகின்றனர். அதை அங்கு அனுப்பவும், உரிய கட்டுப்படியான விலை, தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து கிடைக்கவும் ஏற்றுமதி கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

ஏனெனில் சின்ன வெங்காயம் விளைவிக்கும் விவசாயிகள் சிறு, குறு நடுத்தர விவசாயிகள்தான். வெங்காயம் என்று பொதுவாக ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கிற பொழுது சின்ன வெங்காயமும் தடை படுத்தப்படுகிறது. இது விவசாயிகளுக்கு பெரிய பாதகமாகிறது. எனவே சின்ன வெங்காயத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். அதற்காகவே சின்ன வெங்காயத்திற்கு என தனி ஏற்றுமதி குறியீடுஎண் ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.

The post சின்ன வெங்காயத்துக்கு தனி ஏற்றுமதி குறியீடு எண்: ஒன்றிய அரசுக்கு விவசாய சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Farmers Association ,Union ,Chennai ,Tamil ,Nadu ,Farmers Union ,State General Secretary ,Masilamani ,Tamil Nadu ,Namakkal ,Perambalur ,
× RELATED அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி அய்யாக்கண்ணு போராட்டம்